“பழையன கழிதலும்; புதியன புகுதலும்” என்னும் பழமொழிக்கு ஏற்ப பழையவற்றை புதியவையாக்குகிறார் ஜான்சிராணி. எதையும் பழையது என்று வீணாக்காமல் அதற்கு வேறு வடிவம் அளிக்கிறது இவரது கைகள். மரத்துண்டுகள், பழைய பாட்டில்கள் கொண்டு வீட்டு தோட்டத்திற்கான தொட்டிகள் மற்றும் மறு பயன்பாட்டிற்க்கு பயன்படும் வகையில் பல பொருட்களை செய்து அசத்துகிறார். முன்னாட்களில் ஓவியத்தின் மீதும் கைவினைப் பொருள்கள் செய்வதின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் இதனையே தன் தொழிலாக அமைத்துக் கொண்டார்.
இதன் மீது ஆர்வம் கொண்டு கற்றுக் கொண்டது மட்டுமின்றி தன்னை நாடி வந்தோர்க்கும் எளிமையாகக் கற்றுக் கொடுக்கிறார் ஜான்சி. நேரடி வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்த இவர், கோவிட் தாக்குதலுக்கு பின்னர் இணையவழி கல்வியாக இதனை பலருக்கும் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
முகநூல் மூலமாகவும் மற்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் தனது தயாரிப்புகளை சந்தைப் படுத்துகிறார். இருந்த போதிலும் சந்தைப்படுத்துதலில் போதிய கூறுகள் இல்லாததால் இதுவே அவருக்கு சிறு சோதனையாக அமைகிறது. அவரின் குடும்பம் மற்றும் நண்பர்கள் அவருக்கு பக்க துணையாக விளங்குகின்றன.
அதுவே ஜான்சி இத்தொழில் சிறந்து விளங்க உதவுகிறது.
இவர் செய்யும் கைவினைப் பொருட்கள் சுற்று சூழலுக்கு மாசு விளைவிப்பவை அல்ல. எந்தவொரு பழைய பொருளையும் வீணாக்காமல் அதனை புதிய படைப்பாக மாற்றி அதற்கு உயிர் அளிப்பது சிறந்த கலைப் படைப்பாகும்.
கற்பனைக் கொண்டு கலைப் படைத்து காவியமாக்குவது கலைஞனின் வாழ்வு.